Published On: Friday, November 15, 2013
கொழும்பில் தொடங்கியது காமன்வெல்த் உச்சிமாநாடு
இலங்கை, காமன்வெல்த் மாநாட்டை நடத்தப் பொருத்தமான ஒரு இடமா என்ற சர்ச்சை நிலவும் சூழ்நிலையில், அந்த மாநாடு கொழும்பில் தொடங்கியுள்ளது.
கனடா,இந்தியா மற்றும் மொரிஷியஸ் பிரதமர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், முதல் நாளன்றே வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தலைவர்களை சந்திக்கிறார்.
மாநாட்டில் தான் கலந்துகொள்வது இலங்கையில் நடந்த சம்பவங்கள் மீது சர்வதேச கவனத்தைச் செலுத்தும் என்றும், மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட வாய்ப்பு தரும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
போரில் இலங்கை அரசு வென்றிருக்கிறது ஆனால் இந்த வெற்றி இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். வெற்றிக்குப் பின் பெருந்தன்மை வேண்டும் என்று போர்க்கால பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் கூறியதை அவர் நினைவுபடுத்தினார்.


