Published On: Tuesday, November 19, 2013
நிந்தவூரில் தொடர்ந்து பதட்டம்
சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராக அந்தப் பிரதேசத்தில் நேற்று-திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் அங்கு பதட்ட நிலை தொடருகிறது.
திங்கட்கிழமை முழு அடைப்பின்போது, கல்முனை-அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகளை அகற்ற இன்று செவ்வாய்கிழமை காலை காவல்துறையினர் அங்கு சென்றபோது, அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து பொதுமக்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசமான நிந்தவூரில் அண்மைக் காலமாக இரவு நேரம் வீடுகள் மீது கல் வீச்சு மற்று இதர அச்சுறுத்தல்கள் காரணமாக ஏற்பட்ட ஒரு அச்சநிலை காரணமாகவே திங்கட்கிழமை அங்கு முழு அடைப்புக்கான ஒரு அழைப்பு உள்ளூர் அமைப்புகளால் விடுக்கப்பட்டிருந்தது.
நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை மாலை ஆறு மணியுடன் அந்த முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வீதித் தடைகளை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, பொதுமக்கள் அதற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியதால் மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டு கண்ணீர் புகை குண்டுவீச்சு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
காவல்துறையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாலேயே தமது தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்றைய போராட்டங்களின் போது இதுவரை சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
எனினும் கடந்த 34 மணி நேரங்களுக்கும் மேலாக தடைபட்டிருந்த போக்குவரத்து சேவைகள் இப்போது மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது என்றும், அந்தப் பிரதேசம் மீண்டும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
நிந்தவூர் பகுதியில் கலவரத்தை அடக்கும் காவல்துறையினர் நூற்றுக்கணக்கானவர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


