எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Monday, November 18, 2013

தேவார முதலியின் திருவிளையாடல்கள்

வணக்கமுங்கோ

               பொது நலவாயம் பொதுநலவாயம் எண்டு அதுவும் முடிஞ்சு போட்டுதுங்கோ. ஆனா யாழ்ப்பாணத்தில கமரூன காய்ச்சல் தானுங்கோ இன்னும் தீரேல்லயுங்கோ. அதுதானுங்கோ பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்துபோனவருங்கோ. அந்த கொண்டாட்டத்தில இருந்து யாழ்ப்பாணம் இன்னும் மீளேல்லயுங்கோ. கமரூனோட குறூப் போட்டா எடுக்கிறதில இருந்து கமரூன்ர குறூப் பிறேமுக்குள்ள தங்கண்ட மூஞ்சையும் தெரியவேணும் எண்டு திரிஞ்ச ஆக்கள் வரைக்கும் ஒரே அமர்க்களமுங்கோ. உதுக்குள்ள இன்னுமொரு கூத்தும் நடந்ததுங்கோ. கமரூன் பேப்பர் வாசிக்கிறமாதிரி படம் எடுத்து அத பேப்பறில போட்டு சில ஆக்கள் வியாபாரம் செய்தவயுங்கோ.

             உவயள் பாருங்கோ பிரபாகரன் படத்த முன்பக்கத்தில போட்டு பேப்பர் அடிச்சுப்போட்டு அத கொண்டுபோய் அந்தாளுக்கு காட்டி அவர் தன்ர படம் போட்ட தங்கண்ட பேப்பற வாசிக்கிறமாதிரி ரகசியமா படம் எடுத்து அத அடுத்தநாள் பேப்பறில போட்டு பப்பிளிசிற்றி செய்து யாவாரத்தப் பெருக்கின ஆக்களுங்கோ. பிரிட்டன் பிரதமர் வந்தா சும்மா விடுவாங்களோவுங்கோ. உவங்களுக்கு மூளையில இருந்து ரத்தம் எல்லாம் பிசினசு புத்திதானுங்கோ ஊறியிருக்குதுங்கோ.

எண்டாலும் சம்பந்தர் ஐயா பொது நூலகத்தின்ர வாசலில காறால இறங்கி “உறவுகளே காணாமல் போன உங்கள் சொந்தங்களை மீட்பது பற்றியும் உங்களுக்கான அரசியல தீர்வுபெற்றுக் கொள்வது பற்றியும் தான் பிரித்தானியப் பிரதமருடன் கதைத்தேன். நீங்கள் எதுக்கும் கலங்கவேண்டாம் எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம் எண்டு” நாலுவார்த்த பேசியிருந்தா புள்ளயளப் பறிகுடுத்துட்டு தினந்தினம் அதுகள கண்டுபிடிக்க அலைஞ்சுதிரியிற சனத்துக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்குமுங்கோ. எங்கண்ட கூட்டமைப்புக்காறர் தானுங்கோ உண்மையா உந்த ஆர்ப்பாட்டத்தையே ஒழுங்கு செய்திருக்கோணுமுங்கோ. அவயள் தாங்களும் செய்யமாட்டீனுமுங்கோ செய்றியவயளையும் ஆதரிக்கமாட்டீனுமுங்கோ. பாராளுமன்றமோ – மாகாண சபையோ பதவி கிடைச்சா அடுத்த லெச்சன் வரைக்கும் பதவிய கட்டிப்பிடிச்சுக்கொண்டு அதில கிடைக்கிற சுகபோகத்தில குளிர் காயுறதுங்கோ பிறகு லெச்சன் வந்தோடன சனத்திட்ட ஓடிவந்து வீரவசனங்கள் பேசி சனத்த உசுப்பேத்தி விடுறதுங்கோ சனமும் வேற தெரிவில்லாம போய் வீட்டுக்கு நேர குத்திப்போட்டு வாறதுங்கோ. காலகாலமா உதுதானுங்கோ நடக்குதுங்கோ. எங்கண்ட சனமும் திருந்தப் போறதில்லயுங்கோ கூட்டமைப்புக்காறரும் திருந்தப் போறதில்லயுங்கோ.

              பின்ன என்னங்கோ சொல்லுறது எங்கண்ட ஆக்கள் வைரவியன் கூட்டமைப்புக்கு எதிரா பிரச்சாரம் செய்யிறான் எண்டு கத்துவீனுமுங்கோ. தன்ர சனத்துக்கு முன்னால நிண்டு கதைக்க தைரியமில்லாத – விருப்பமில்லாத தலைவரை விமர்சிக்கிறது தப்பில்ல பாருங்கோ. அண்டைக்கு நூலகத்தில மீற்றிங்கு முடிஞ்சு கமரூன் முன் கேற்றால போக எங்கண்ட கூட்டமைப்புத் தலைவர் கூப்பிடக்கூப்பிட வேகமா பின் கதவால ஓடினவருங்கோ. இதில பகுடி என்னண்டா அண்டைக்கு அஞ்சு நிமிசத்துக்கு முதல்ல சனத்திற்கும் மதகுருவுக்கும் அடிச்ச பொலிசுக்காறர் சம்பந்தன் ஐயாவுக்கு பாதுகாப்புங்கோ அவர் பின்கேற்றுத் தாண்டி போற வரைக்கும் உவயள் அவருக்கு பொடிக்காட்டுக்கோ. அவயள் சனத்த தேர்தலுக்காண்டி உசுப்பேத்திப்போட்டுப் போடுவீனுமுங்கோ ஏதன் பிரச்சினை எண்டால் திரும்பிப் பாக்க மாட்டீனுமுங்கோ சனந்தானுங்கோ அடிவேண்டுறதுங்கோ.
கமரூன் வாறார் எண்டாப்போல நானும் லைபிறறிப் பக்கம் போய் பாத்தனானுங்கோ. யாழ்ப்பாணத்துக்கு பிரித்தானிய பிரதமர் ஒருவர் முதல் முதலா வாறார் அந்த வைபவத்தில வைரவியர் இல்லாட்டிக்கு நல்லாயிருக்காதுஎண்டு ஒரு எட்டு எட்டிப் பாப்பம் எண்டு போனனுங்கோ. அங்க புள்ளயள தொலைச்ச சனம் கத்திக் குழறுறதப்பாத்த உடன் பிரித்தானிய பிரதமர பாக்கிறது எண்ட என்ர மனசு மாறிப்போட்டுதுங்கோ. பேசாம சனத்தோட நிண்டுட்டனுங்கோ.

அப்பத்தானுங்கோ உந்தக் கூத்து எல்லாம் நடந்ததுங்கோ. ஆர்ப்பாட்டம் நடக்குறது பிரதமர் கமரூன்ர கண்ணில படக்கூடாதுஎண்டு றோட்டுக்கு குறுக்கா பொலிஸ் வாகனத்தக் கொண்டுவந்து விட்டவங்களுங்கோ. அதுக்குள்ள சோடாப் போத்திலுகளும் “சனத்துக்கு குடுக்க எண்டு நினைக்காதீங்கோ” அதுகள் வெற்றுப் போத்திலுகளுங்கோ. உறுட்டுக் கட்டையளும் லத்திகளும் கிடந்ததுங்கோ. ஆர்ப்பாட்டம் செய்த சனம் லைபிறறி வாசல நோக்கி நகரேக்க அந்த வாகனத்துக்குள்ள இருந்து லத்திகள் பொல்லுகள வெளியில எடுத்த நான் பாத்தானுங்கோ அப்ப ஒரு பொலுசுக்காற தம்பி “சாச்” சொல்லேல்ல “அதுதானுங்கோ மிலேச்சத்தனமா தாக்குற உத்தரவுங்கோ” அடிக்கவேண்டாம் எண்டு கத்தினதுங்கோ. ஆனா அதுக்கு முதலே கைகளால அடிச்சும் பொம்பிளையள், மதகுருமாரி நிலத்தில இழுத்து விழுத்தியும் பொலிசுக்காறர் தங்கண்ட வீரத்தக் காட்டினவயுங்கோ. உதுகள பி.பி.சிக் காறங்களும் சனல் 4 நாலுக் காறங்களும் தங்கண்ட வானுக்குள்ள இருந்து வீடியோ எடுத்து சுடச்சுட நெற்றில ஏத்திப் போட்டாங்களுங்கோ அத உலகம் முழுக்க பாத்துப்போட்டுதுங்கோ.

உதத்தானுங்கோ சொல்லுறதுங்கோ வேலியில போற ஓண்ன பிடிச்சு வேட்க்குள்ள விடுற கதை எண்டு. உந்த அக்குறுமங்களால அடிவேண்டின சனங்கள் தானுங்கோ சம்பந்தர் ஐயாவக் கண்ட உடன சந்தோசத்தில தங்கண்ட உள்ளிக் கிடக்கையள கொட்டித் தீக்கவும் பிரித்தானிய பிரதமரோட என்ன கதைச்சனீங்கள் எண்டு அறியவும் அவர கூப்பிட்டதுகளுங்கோ. அப்பத்தானுங்கோ தன்ர சனத்திற்கு அறுதல் சொல்ல திரணி இல்லாத தலைவர் பின் கேற்றால ஓடினவருங்கோ. உந்தக் கூத்த என்ர கூட்டாளி ஒருத்தருக்குச் சொன்னனானுங்கோ அதுக்கு அவர் சொன்னாருங்கோ

சம்பந்தர் அலரி மாளிகைக்கு சந்திப்புகளுக்கு போய்வரேக்க பின் கதவால போய் வந்து பழக்கப் பட்டடிருக்கும் அதுதான் பிரித்தானிய பிரதமரையும் சந்திச்சுப்போட்டு போகேக்க பின் கதவு ஞாபகம் வந்திருக்கும் எண்டு.
உவர் ஓடினதால கொதிச்சுப்போன சனம் காது குளிர செய்த அரிச்சனையின்ர வீடியோ கொப்பி ஒண்டு கையில கிடக்குங்கோ சந்தர்ப்பம் கிடைக்கேக்க தலைவருக்கு ஒருக்கா போட்டுக் காட்டவேணுமுங்கோ.

நான் போட்டுவாறனுங்கோ
வைரவி அப்பு


நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்