Published On: Friday, November 15, 2013
ஆனையிறவில் கனடிய பிரதிநிதியின் மலர்வளைய அஞ்சலி! (படங்கள் இணைப்பு)
தற்பொழுது இலங்கையில் இடம் பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும் கனடாநாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருள் ஒருவரு மான தீபக் ஒப்ராய் கடந்த செவ்வாய்க் கிழமை யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். குடாநாட்டை நோக்கி வாகனத்தில் பயணம் செய்த இவர் வழியில் ஆனையிறவில் தரித்து இறுதி யுத்தத்தில் பலியாகிய மக்களுக்கு திறந்த வெளியொன்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று குடாநாட்டு ஊடகங்களின் இன்றைய நிலைமை தொடர்பாக கலந்துரையாடியதுடன் யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந் துள்ளார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூரும் செயற்பாடுகளில் தமது பிரதிநிதியான தீபக் ஒப்ராய் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களைக் கனடா மறுத்துள்ளது.
போரில் உயிர் நீத்தவர்களுக்காக ஆனை யிறவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதை தமிழீழ விடு தலைப் புலிகளை நினைவு கூரும் செயற்பாடென இலங்கை அரசு விமர்சித்திருந்தது. இந்த நிலையில் இதற்குப் பதிலளித்துள்ள கனேடிய அரசு, விடுதலைப் புலிகளின் சகல செயற்பாடு களையும் நாம் அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பயங்கரவாத அமைப்பாகக் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து நாம் தடைவிதித்து வருகின்றோம். மாநாட்டில் கலந்துகொள்ளும் கனேடியப் பிரதிநிதியான தீபக் ஒப்ராய் வடக்கு சென்றிருந்தபோது வன்முறையில் பாதிக்கப்பட்ட இலங்கையின் அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பாக அதனை பயன்படுத்தினார். இதனால் ஆனையிறவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார். இலங்கையில் சகல மக்களும் உறுதியான சமாதான சூழ்நிலையில் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கனடா உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





